இரணைதீவு மக்களின் பிரச்சினை :மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைக்கு விஜயம்!

279 0

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உற்பட்ட இரணைதீவு பகுதியில் குடியேறியுள்ள மக்கள் தொடர்பாகவும், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேரடியாக அறித்து கொள்வதற்காக யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கணகராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று மாலை இரணை மாதா நகரில் இருந்து படகு மூலம் இரணைதீவிற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) ஊடகா மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மற்றும் ஊடகங்களின் மூலம் அறிக்கையிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் இரணைதீவு மக்கள் மீள் குடியேற்றப்பட்ட பின்னர் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் மக்கள் ஊடக நேரடியான முறைப்பாட்டை உறுதிப் படுத்துவதற்காகவும் குறித்த குழுவானது விஜயத்தை மேற்கொண்டிருந்தது. 

குறித்த விஜயத்தின் போது மக்கள் நேரடியாக தங்களுடைய முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளின் முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக இரணைதீவு பகுதியில் குடியேறி ஒரு வருடம் ஆக போகின்ற நிலையில் இதுவரை தாங்கள் உரிய முறையில் குடி யேற்றப்படவில்லை எனவும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயல் படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் அரச திணைக்கள அதிகாரிகள் தமது தீவு பகுதிக்கு வருவது மிக குறைவும் எனவும் எம் பிரச்சினைகள் தொடர்பாக அறிந்து கொள்வது கூட இல்லை எனவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைக்கும் சமூர்த்தி பணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை கூட அதிகாரிகள் எமது பகுதிகளில் வழங்குவதில்லை எனவும் அவ் சிறிய தொகை பணத்தை பெறுவதற்கு கூட தாங்கள் 14 மைல் தூரம் கடலில் பயணித்து இரணைமா நகரில் பெறவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் குடிநீர் பெறுவதற்காக தங்கள் தினமும் 5 கிலோமீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தங்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் மருத்துவ தேவைகளையும் உடனடியாக பெற்று தருவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.