ராணுவ நடவடிக்கையை கைவிடுங்கள்- இந்தியா, பாகிஸ்தானுக்கு பென்டகன் வலியுறுத்தல்

232 0

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை கைவிடும்படி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து, புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாமை அழித்ததால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதே நிலை நீடித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் கவலை அளிப்பதாகவும், இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், மத்திய பாதுகாப்பு படை கமாண்டர் ஜோசப் வோட்டல் மற்றும் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி (பொறுப்பு) பேட்ரின் ஷானகான் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். 

பதற்றத்தை தணிப்பதில் மந்திரி ஷானகான் கவனம் செலுத்தி வருகிறார். இரு நாடுகளும் மேற்கொண்டு ராணுவ நடவடிக்கை தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எல்லையில் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லை தாண்டிய அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையும் வலியுறுத்தி உள்ளது. பதற்றத்தை தணிப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதேபோல் இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டு பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கனடாவும் கேட்டுக்கொண்டுள்ளது.