
மக்களை பற்றி கவலைப்படாமல், பணத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அகரம் சேரி ஊராட்சியில் தி.மு.க. சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி இருந்தபோது மக்களுக்கு எல்லாம் கிடைத்தது. ஆனால், இப்போது எதுவும் இல்லை என்றீர்கள். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தினோம். எல்லாக் காரியங்களையும் செய்ய முடிந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகின்றார்கள். எனவே, இந்த பஞ்சாயத்திற்கென்று ஒரு கவுன்சிலர், தலைவர், நிர்வாகிகள் இருந்திருந்தால் இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இப்படி வந்து உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமும் உங்களுக்கு இருந்திருக்காது.
சோழர்கள் காலம் முதல்
இப்பொழுது புதிதாக அரசியலுக்கு வந்திருக்கின்ற ஒருவர், அடுத்து நான் தான் முதல்-அமைச்சர் என்று சொல்லிக்கொண்டிருப்பவர் கூட அவரைப்பார்த்து நாங்கள் காப்பியடித்தோம் என்று சொல்லக்கூடிய செய்தி வந்து கொண்டிருக்கின்றது. அதையும் நீங்கள் பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அது யார் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முதன்முதலில் இந்த கிராம சபைக் கூட்டத்தை சோழர்கள் காலத்தில் துவங்கி, அதன்பிறகு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சுதந்திர நாள், குடியரசு நாள் இந்த இரண்டு நாட்களில் அரசாங்கமே கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். நானே பல கிராமங்களுக்குச் சென்று கிராம சபைக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றேன். அப்பொழுது அமைச்சர்களாக இருந்தவர்களும் சென்று கிராம சபைக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சியாக இருந்தாலும் எல்லாக் கட்சி எம்.எல்.ஏக்களுமே கிராம சபைக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள். ஒரு வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு 10 பேரை கூட்டி வைத்துக்கொண்டு பேசினால், அது கிராம சபைக் கூட்டமா?.
நிச்சயமாக நிறைவேறும்
இன்றைக்கு நீங்கள் எவ்வளவு நம்பிக்கையோடு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள். எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று உங்களுக்குத்தான் அதிக நம்பிக்கை வந்திருக்கின்றது. இல்லையென்றால் இவ்வளவு தூரம் வந்து உட்கார்ந்திருப்பீர்களா நீங்கள்?. எந்த நம்பிக்கையோடு வந்தீர்களோ, அந்த நம்பிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ம.க. குறித்து விமர்சனம்
பா.ம.க.வோடு அ.தி.மு.க. கூட்டணியாம். இதே பா.ம.க கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் என்னென்ன பேச்சு பேசியிருக்கிறார்கள். நம்மையும் சேர்த்து தான் பேசியிருக்கிறார்கள். அது வேறு. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஏற்கனவே ஏழு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட போது என்ன நிலைக்கு ஆளானார்கள் என்பது தெரியும். 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோல்வியடைந்தார்கள் என்று நான் அப்போதே சொன்னேன். சில பேருக்கு புரியவில்லை. 7 தொகுதி என்பது நாடாளுமன்றத் தொகுதிகள் கொடுத்தது. இன்னொன்று எது என்றால் ராஜ்யசபா. ராஜ்யசபா என்பது இரண்டு எம்.பி.க்கு சமம். இப்பொழுதும் 7+1 கொடுத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு பாருங்கள்.
இதே டாக்டர் ராமதாஸ் அவர்கள், சமீபத்தில் அ.தி.மு.க.வை விமர்சித்து மேடையில் பேசிவிட்டோ, அறிக்கை விட்டு விட்டோ போகவில்லை. புத்தகமே போட்டிருக்கிறார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? கழகத்தின் கதை. அந்தப் புத்தகத்தை போட்ட பெரிய மனுஷன் தான் இன்றைக்கு ஊழல்வாதிகளிடம் கூட உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். வெட்கம் இல்லை? சூடு இல்லை? சொரணை இல்லை? நான் கேட்கிறேன்.
பணத்திற்காக கூட்டணி
அப்படிப்பட்ட நிலையில் ஒரு பதவி தேவைதானா?. 7 சீட் மட்டுமல்ல, 1 ராஜ்ய சபா சீட் மட்டுமல்ல. அதற்குப் பின்னாலும் இருக்கிறது. அதெல்லாம் வெளியில் வரத்தான் போகிறது. கழகத்தின் கதை என்கிற புத்தகத்தில், எடப்பாடியை மட்டுமல்ல, ஜெயலலிதாவைப் பற்றியும் அவர்கள் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள், ஒவ்வொருவருடைய சொத்து என்ன, அமைச்சர்களின் வண்டவாளங்கள் என்ன என்பதையெல்லாம் எழுதியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இன்றைக்கு கூட்டு சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், மக்களைப் பற்றி நாட்டைப் பற்றி கவலைப்படாமல் பணத்தைப் பற்றி கவலைப்பட்டு இன்றைக்கு கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.இந்த நிலையில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஒன்று சேர்ந்திருக்கிறது. நம்முடைய தி.மு.க. கூட்டணி நேரத்திற்காக அல்ல, சூழ்நிலைகளுக்காக அல்ல, நாட்டு மக்களின் பிரச்சினைகளை, குறைகளை தீர்த்துவைப்பதற்காகத் தான் என்பதை உறுதியோடு இங்கே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

