என்னை பார்த்து கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள் தி.மு.க. மீது கமல்ஹாசன் தாக்கு

235 0

என்னை பார்த்து கிராமசபை கூட்டம் நடத்துகிறார்கள் என்று தி.மு.க. மீது கமல்ஹாசன் மறைமுகமாக தாக்குதல் தொடுத்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

நான் வித்தியாசமான, வினோதமான அரசியல்வாதி. அரசியலில் எதுவும் சரியில்லை. அதனை சரி செய்ய வேண்டும். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். மாணவர்களுக்கு மட்டுமல்ல யாருமே அரசியலை நீக்கிவிட்டு வாழ முடியாது. சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தால் கலவரங்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். 

அரசியல் தான் தொழில் என்று வருபவன் நாட்டை திருத்த மாட்டான். தன்னை தேற்றிக்கொள்வான். 5 வருடத்தில் அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்பதை பாருங்கள். எனவே வாக்களிக்கும்போது சிறிது நேரம் யோசித்து தங்களுடைய வாக்குகளை போடுங்கள். அரசியலில் என்னையே நான் முதலீடாக போட்டிருக்கிறேன். நான் இழப்பது என்ன தெரியுமா? 4 படம் நடிக்க வேண்டிய இடத்தில் 1 படம் நடிக்கிறேன் என்றால் அந்த 3 படம் இழப்பு.
சட்டையை கிழித்துக்கொண்டு தெருவில் நிற்க முடியாது. சட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்துக்கொண்டு நிற்க மாட்டேன். அப்படி கிழிந்தாலும் வேறு நல்ல சட்டை போட்டுக்கொண்டுதான் வெளியில் வருவேன். என்னுடைய எண்ணம் எதுவோ அதுக்கு தான் நான் கிரீடம் வைப்பேன்.

மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நல்லிணக்கம். அரசியல் மாண்பின் கடைசி கோட்டைச் சுவராக மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. அதனை யாரும் தட்டி கொடுக்கவும் இல்லை. கொஞ்சவும் இல்லை. அந்த குழந்தையை நீங்கள் கையில் எடுங்கள்.

Learn Moreரத்தம் வந்தால் அதனை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். உடனடியாக அறுவை சிகிச்சைக்கு செல்ல முடியாது. அறுவை சிகிச்சையும் அவசியம். ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்துள்ளனர். கொடூரமான விஷயம் தான். உங்களது பெற்றோர் ராணுவத்துக்கு செல்லவேண்டாம் என்றால் அவர்களிடம் சொல்லுங்கள், ராணுவத்தில் உயிர் இழப்பவர்களை விட தமிழகத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள் தான் அதிகம் என்று.
ராணுவ வீரர்கள் இறப்பதற்கு தான் ராணுவத்துக்கு வருகிறார்கள் என்கிறார்கள். 2 நாட்டின் அரசியல் தலைவர்களும் அமர்ந்து பேசினால் ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டியதில்லை. இவ்வாறு செய்தால் எல்லைக்கோடு நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
கூட்டணி என்னும் கருப்புக் குட்டைக்குள் நுழைத்து எனது புது காலணியை அழுக்காக்க விரும்பவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அது தமிழகத்தை பாதிக்கும். எனவே நான் அங்கு செல்வது தமிழகத்துக்காகத்தான். அதன் பிறகு தான் எனக்கு தேசம். கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சொல்வது முறையல்ல. அவ்வாறு செய்தால் யாரும் மதிக்கமாட்டார்கள். நாங்கள் எடுத்தது சரியான முடிவு தான். கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் எதை, எதை செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொண்டேன். பொது அறிவு கூட இல்லாதவர்கள் சிலர் தலைவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு பொது அறிவு இருக்கிறது. இதனால் எனக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. கிராம சபை கூட்டம் ஒன்று இருப்பது யாருக்கும் தெரியாதா? நேற்று வந்த பையனை பார்த்து காப்பி அடிப்பதற்கு வெட்கமாக இல்லையா?. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், “தி.மு.க.வை கடுமையாக விமர்சிப்பதற்கு தி.மு.க.வே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே நான் விமர்சிப்பேன். கூட்டணியில் இடம் பெற முடியாததால் தி.மு.க.வை விமர்சிக்கவில்லை. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வந்த தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். ஆனால் எனக்கு அல்ல” என்றார்.