போலீஸ் வாகனம் மோதி 3 பேர் பலி!

224 0

விழுப்புரம் அருகே மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்கு சென்று திரும்பிய போலீஸ் வாகனம் மோதியதில் 3 பேர் பலியாகினர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். பின்னர் புதுச்சேரியில் அந்த மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க விழுப்புரம் வழியாக புதுச்சேரி புறப்பட்டார். 

இதற்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரை மு.க.ஸ்டாலினின் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஒரு போலீஸ் வாகனத்தில் சென்றனர்.

நாராயணசாமியை சந்தித்து விட்டு அங்கிருந்து விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். அதன்பிறகு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் புதுச்சேரியில் இருந்து மாலையில் விழுப்புரம் புறப்பட்டனர். அந்த வாகனத்தை விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் டிரைவரான சரவணன் ஓட்டி வந்தார். அந்த வாகனம், விழுப்புரம் மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகில் வந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தறிகெட்டு ஓடி 2 மோட்டார் சைக்கிள்களில் மோதியது. மேலும் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த மண்ணாங்கட்டி (வயது 60) என்பவர் மீதும் மோதிவிட்டு அங்குள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் மண்ணாங்கட்டி, மோட்டார் சைக்கிளில் வந்த பாபு (30), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருமுருகன் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்தில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. அதில் இருந்த சரவணன் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர் தப்பினர். இதையடுத்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் விபத்துக்கு காரணமான போலீஸ் வாகன டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விபத்தை ஏற்படுத்திய ஆயுதப்படை போலீஸ் வாகன டிரைவர் குடிபோதையில் இருந்தாரா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.