இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை!

231 0

140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தியது.

140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய விமானப்படை இரவு-பகலாக மிகப்பெரிய போர் ஒத்திகை நடத்தி உள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி துணை ராணுவத்தினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி 40-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்திருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் செயல், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் சோகத்தையும், கோபத்தையும் ஒருசேர ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடிப்பிடித்து பழிதீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு உரி ராணுவ முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிதீர்ப்பதற்காக நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் போல மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே நேரம் இந்திய மண்ணில் தொடர்ந்து பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் பாகிஸ்தானுக்கும், அதன் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க மத்திய அரசும் எத்தனித்து வருவதாகவே கூறப்படுகிறது.

புலவாமா தாக்குதலை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இதையே எதிரொலித்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியது, இந்த கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில் ‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை நடத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவையும் கடந்து விடிய, விடிய நடந்த இந்த ஒத்திகையில் 140 போர் விமானங்கள், ஹெலிகாப்டர் கள் மற்றும் நவீன ஏவுகணைகள் என அதிகமான தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டன.

இலகு ரக தேஜாஸ் விமானங்கள், நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்கள் (ஏ.எல்.எச்.), தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஆகாஷ் ஏவுகணை, வானில் இருந்து வான் இலக்கை தகர்க்கும் அஸ்திரா ஏவுகணை போன்றவை இரவிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தங்கள் வலிமையை உறுதி செய்தன.

இதைத்தவிர மிக்-29 தாக்குதல் ரக விமானம், சுகோய்-30, மிராஜ் 2000, ஜாகுவார், மிக்-21 பைசன், மிக்-27, ஐ.எல்.78, ஹெர்குலிஸ், ஏ.என்.32 போன்ற விமானங்களும் இந்த ஒத்திகையில் சிறப்பாக செயல்பட்டன. ஹெர்குலிஸ் போர் விமானம் குறுந்தொலைவு கொண்ட ஓடு தளத்தில் ஏறி இறங்கி வீரர்களையும், தளவாடங்களையும் கொண்டு சேர்த்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள், கருடா கமாண்டோ படை மற்றும் போர் விமானிகள் குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை செலுத்தியும் துல்லிய பயிற்சி மேற்கொண்டனர். மேலும் தாக்குதல் ரகத்தை சேர்ந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து பொக்ரான் தரைப்பரப்பை அதிர வைத்தன.

மிகவும் பரபரப்பான சூழலில் நடந்த இந்த போர் ஒத்திகையை விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, ராணுவ தளபதி பிபின் ராவத், முன்னாள் கிரிக்கெட் வீரரும், விமானப்படையின் சிறப்பு கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஏராளமான விமானப்படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

முன்னதாக இந்த ஒத்திகையின் தொடக்க நிகழ்ச்சியில் பி.எஸ்.தனோவா கூறுகையில், ‘நமது அரசு கட்டளையிடும் சரியான பதிலடியை கொடுக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கிறது. மேலும், தனது திட்டங்களை செயல்படுத்துவதில் எப்போதும் முன்னணியில் இருக்கிறது’ என்று கூறினார்.

விமானப்படையின் ’குண்டூசி முனையளவு துல்லிய’ திறனை பறைசாற்றும் விதமாக இந்த ஒத்திகை நடந்ததாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

புலவாமா தாக்குதல் நடந்த ஓரிரு நாளில் விமானப்படை போர் ஒத்திகையை நடத்தி இருப்பதன் மூலம் மீண்டும் ஒரு துல்லிய தாக்குதலுக்கு இந்திய படையினர் தயாராவதாகவே தெரிகிறது.