ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

242 0

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், தமிழ்நாடு கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன், அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், ரோகிணி மூசா ஆகியோர் ஆஜரானார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தானே நேரில் ஆஜராகி வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 7-ந் தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.