முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு தபால் ஊழியர் தற்கொலை!

353 0

சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதத்தை சுசீந்திரம் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எழுதியுள்ளார்.

குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரமாணிக்கம் (வயது 60). தபால் ஊழியர். இவருடைய மனைவி நேசவடிவு. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சுந்தரமாணிக்கம் ஆரல்வாய்மொழி தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுந்தரமாணிக்கம் உடையப்பன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்துள்ளார். மேலும் சுந்தரமாணிக்கம் சட்டைப்பையில் இருந்த உருக்கமான கடிதத்தை சுசீந்திரம் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கந்து வட்டி கொடுமையால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக எழுதி வைத்துள்ளார். கந்து வட்டி கொடுமைக்கு, என்னுடைய தற்கொலை தான் கடைசியாக இருக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வரும் நீங்கள் கந்து வட்டியை ஒழித்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சருக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அவரிடம் கந்து வட்டி வசூலித்த நபர்களின் பெயர்களையும் விலாவாரியாக தெரிவித்துள்ளார். கந்து வட்டி கேட்டு 11 நபர்கள் தகாத வார்த்தைகளால் அவரையும், குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளனர். இந்த மனவேதனையில் தான் சுந்தரமாணிக்கம் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கந்து வட்டி கும்பலை பிடித்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.