அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு எந்திரம் – ஐகோர்ட்டில், தேர்தல் ஆணையம் தகவல்

331 0

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் வக்கீல் பாக்யராஜ். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரவலாக எழுந்துள்ளது. அதனால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய, வாக்கு சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் பொருத்த வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்படவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில், ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் வாக்கு சரிபார்க்கும் எந்திரம் நிறுவப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை சரியான பதில் அளிக்கவில்லை.

கோவா சட்டமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பயன்படுத்திய நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த எந்திரத்தை பொருத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஒப்புகை சீட்டு எந்திரத்தை பொருத்தும் நடைமுறையை படிப்படியாக மேற்கொள்ளவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. அதில், விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நூறு சதவீதம் இந்த எந்திரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave a comment