மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பதற்றம்

1076 14

மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாபாஸ் மாநிலம் தபசுலாவில் இருந்து 10 மைல் தொலைவில், கடலுக்கடியில் 40 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள், பயந்துபோய் வீடுகளை விட்டு வெளியேறி நீண்ட நேரம் திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. நிலநடுக்கம் காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகளில் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. 

தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. அண்டை நாடான கவுதமாலா, எல்சால்வடோர் ஆகிய நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களில் பெரிய அளவில் சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. 

இதே பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டபோது, 100 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் (7.1 ரிக்டர்), 400க்கும் மேற்பட்டோரை பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment