தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

22496 0

தமிழ்நாட்டின் இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

1.1.2019 தேதியன்று 18 வயதை முடித்துள்ளவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ளும்படி இந்தியத் தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. 

அதைத் தொடர்ந்து கடந்த 1.9.2018 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள்; 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள்; 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவராகும். 

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது இன்று காலையில் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகராட்சியிலும், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு 31.8.2018 வரையிலான வாக்காளர் பட்டியல் திருத்தக்காலத்தில் 1.82 லட்சம் வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இறந்த வாக்காளர் பெயர்கள், இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு ஆகிய காரணங்களால் 5.78 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. 

வாக்காளர் பட்டியலில் காணப்பட்ட இரட்டை பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர் நீக்காத நிலை ஆகியவற்றைகளைய 2018-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுருக்க முறை திருத்த பணியின்போது நவீன தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டன. எனவே இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் அதுபோன்ற பெயர்கள் நீக்கப்பட்டு பெரும்பாலும் குறையில்லாத வாக்காளர் பட்டியலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Leave a comment