விஜயகாந்தை விமர்சித்து வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பரபரப்பு

437 0

vivjதேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோல வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தமாகாவுடன் தேமுதிக சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
இந்தக் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், எம்.எல். ஏ.க்களாக இருந்த சி.ஹெச்சேகர், எஸ்.ஆர்.பார்த்திபன், தேமுதிக துணைத் தலைவர் தேனி முருகேசன் உட்பட 100க்கும் அதிகமான தேமுதிகவினர் கட்சியை விட்டு விலகி மக்கள் தேமுதிகவை ஆரம்பித்தனர்.
தேமுதிக சார்பில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.
இதையடுத்து, வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் பணம் கொடுத்தார்.
சில வேட்பாளர்கள் பணம் கேட்டு நச்சரித்ததால், கட்சியை கலைத்துவிடுவேன் என்று விஜய காந்த் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒன்றிய, நகர செயலாளர்களுடன் விஜயகாந்த் கடந்த ஒரு வார காலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த சூழலில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பேரில் விஜயகாந்தின் நடவடிக்கையையும், தேமுதிகவின் போக்கையும் விமர்சிக்கும் வண்ணம் விஜயகாந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இந்த கடிதங்களின் அனுப்புனர் முகவரியில் மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் பெயர் இருந்தது.
இந்த கடிதத்தில், ‘விஜயகாந்த் நன்கொடை வாங்குவதில்லை என்று மேடையில் சொன்னாலும், மாவட்ட செயலாளர்களிடம் பணம் வாங்கப்படுகிறது.
தேமுதிக அறக் கட்டளை பணத்தை விஜயகாந்த் தனது சொந்த செலவுக்கு பயன்படுத்துகிறார்.
தேர்தல், திரைப்படங்கள் தோல்வியடைந்த போதும் விஜயகாந்த் மற்றும் சுதீஷ் குடும்பத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும். தேமுதிகவால் நாங்கள் முன்னேறவில்லை. எனவே கட்சியை கலைத்துவிடுங்கள்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment