சுவாதியின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்- தந்தை உருக்கம்

463 0

swathi_2909697fசென்னையை உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலை விவகாரத்தில் தன் மகள் சுவாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவரது தந்தை கே.சந்தான கோபால கிருஷ்ணன் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.கொலைக்கான பின்னணி குறித்து வதந்திகளைப் பரப்பி மகளின் பெயருக்கு தயவு செய்து களங்கம் கற்பிக்க வேண்டாம் என்று ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் தெரிவிக்கும் போது கேட்டுக் கொண்டார்.

அவர் கூறும்போது, “சுவாதியின் உயிரை இனி யாரும் கொண்டு வரப்போவதில்லை. பிறகு ஏன் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், நடத்தைப் படுகொலை செய்ய வேண்டும்?” என்றார் அவர் வேதனையுடன்.

மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தங்கள் குடும்பம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை சூளைமேடு கங்கை யம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி (24), மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர்.

அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் வந்த இவர், மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது சென்னை மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே போலீஸார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சுவாதியின் கொலையின் பின்னணி குறித்து ஊடகங்களில் வதந்திகளை எழுதி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a comment