கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் – விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு!

303 0

சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 23 வயது பெண் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

எனக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் வரக்கூடாது. அரசு ஆஸ்பத்திரியை நம்பிச்சென்ற நான் இன்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன்.

ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியவர்கள் இதற்கு வேறு ஊசி போட்டு என்னை கொலை செய்திருக்கலாம்.

தவறு நடந்த பிறகு என்னை சந்திக்கும் மருத்துவ துறையினர் உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். இதனை பெரிதுபடுத்தாதீர்கள். அரசு வேலை மற்றும் நிவாரணம் பெற்று தருகிறோம். என்றெல்லாம் கூறுகின்றனர்.

அவர்களது தவறான செயலால் இந்த சமுதாயம் என்ன புறந்தள்ளக்கூடாது. எனக்கு தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

மேலும் தவறுசெய்தோர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தூர் போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க உள்ளேன். என் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் இருவரும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில்:-

எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது அழுது கண்ணீர் வற்றியது தான் மிச்சம். தற்போது எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்படாதது மக்களுக்கு அரசு மருத்துவமனையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

எங்களுக்கு அரசும் அரசியல் பிரமுகர்களும் உதவ வேண்டும் என்றார்.

இதற்கிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார்.

Leave a comment