சத்துணவு திட்டத்தை சிதைக்க முயல்வதா?- தினகரன் கண்டனம்

330 0

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செயல்படுத்திய சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் கூறியுள்ளார்.

புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் செழுமைப் பெற்ற சத்துணவு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தாமல், 25 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூட இந்த அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இந்த உத்தரவை எதிர்த்து வரும் நாளை (27-ந்தேதி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

25 மாணவர்களுக்கும் குறைவானவை என 8000 மையங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதனை மூட இந்த அரசு முடிவு செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இது இத்திட்டத்தால் பயனடைந்துவரும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும், சமூக முன்னேறத்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

25-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள மையங்களை மேம்படுத்தி அதில் மாணவர்கள் அதிகம் வருவதை இந்த அரசு அக்கறையோடு முன்னெடுத்திருக்க வேண்டும், அதை விடுத்து மையங்களை மூட நினைப்பது அரசின் கையாலாகாத்தனத்தைத் தான் காட்டுகிறது.

மூச்சுக்கு மூச்சு அம்மாவின் அரசு என கூறிக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவி அம்மாவாலும் முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு, பல மாநிலங்களுக்கு உதாரணமாக திகழ்ந்திட்ட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசின் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார். 

Leave a comment