எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

450 0

பு்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயணித்தார்.

பிரபஞ்சன் எழுதிய வானம் வாசப்படும் நாவல் தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இது படைக்கப்பட்டது. இவரது படைப்புகள் ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 57 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் எழுத்துலகில் இயங்கி வந்த இவர், இளம் எழுத்தாளர்கள் பலரது ஆதர்சமாகவும் அறியப்படுகிறார்.

100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபஞ்சன், கடந்த ஓராண்டாகப் புற்றுநோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். கடந்த 15ஆம் தேதியன்று அவரது உடல்நலம் மோசமடைந்தது. இதையடுத்து புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (டிசம்பர் 21) பிரபஞ்சன் காலமானார். இவரது வயது 73.

Leave a comment