எந்த கணிணியையும் கண்காணிக்கலாம்!

319 0

நாட்டில் உள்ள அனைத்து கணிணிகளையும் கண்காணிக்க 10 விசாரணை முகமைகளுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி விசாரணை முகமைகள், நாட்டில் உள்ள அனைத்து கணிணிகளிலும் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், பரிமாறப்படும் தகவல்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, அந்த தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடை செய்வது, தகவலின் உண்மைத்தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.  இதற்கான அனுமதியை உள்துறை அமைச்சக செயலர் ராஜீவ் கவுபா வழங்கியுள்ளார். 

உளவுத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் நுண்ணறிவு பிரிவு, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை, கேபினட் செகரட்டரி (R &AW),  டெல்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட  10 விசாரணை அமைப்புகளுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
விசாரணை முகமைக்கு தேவை ஏற்படும் நேரத்தில் எந்த தகவல் தொடர்புசேவை வழங்குவோர், அல்லது பயன்பாட்டாளர் அல்லது கணிணி மையத்தின் பொறுப்பாளர் உதவ வேண்டும். அனைத்து விதமான தகவல் தொடர்பான வசதிகளையும் அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைக்கத் தவறினால், அவர்களுக்கு 7 ஆண்டுவரை கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
முன்னதாக உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றே, தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கூறிய விசாரணை முகமைகள் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment