விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்!

301 0

விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள (கோட்டம் 1 முதல் 200 வரை) பகுதிகளில் தனிநபர்கள், கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், அரசியல் கட்சிகள் சார்பாகவும் விளம்பர பேனர் வைக்க சட்டவிதிகளின்படி முறையாக விண்ணப்பம் அளித்து பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

விதிகளுக்கு மாறாகவும், அனுமதி பெறாமலும் பேனர் வைத்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஓராண்டு ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற்று 6 நாட்களுக்கு மட்டுமே பேனர் வைக்க வேண்டும். 6 நாட்களுக்கு பின்பு விளம்பர அமைப்பாளர்களே அவற்றை அகற்ற வேண்டும்.

அனுமதி வழங்கப்படும் பேனர்களின் கீழ்பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட எண், அனுமதி நாள், அனுமதிக்கான காலஅவகாச நாள், அச்சகத்தின் பெயர் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட அளவு (நீளம், அகலம்) ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.

தவறும் பட்சத்தில் அத்தகைய விளம்பர பேனர்களும், விளம்பர தட்டிகளும் விதிமீறலாக கருதப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், விளம்பர பேனர்கள் வைக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் படிவம் 1-ஐ பூர்த்திசெய்து அனுமதிகோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து அதற்கான தடையின்மை சான்று, பேனர் வைக்கும் இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணம் ரூ.200-க்கான வரைவோலை (டி.டி.) மற்றும் காப்பீட்டு தொகை ரூ.50-க்கான வரைவோலையை (டி.டி.) ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் பேனர் அமைக்கக்கூடாது. 10 அடிக்கும் குறைவாக நடைபாதை இருக்கும் சாலைகளின் 2 புறங்களும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டது. நடைபாதைகளின் குறுக்காகவோ அல்லது சாலையின் குறுக்காகவோ வைக்க கூடாது. நடைபாதை அல்லது சாலைக்கு இணையாக வைக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வெட்டுகள், சிலைகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் சாலை சந்திப்பு அல்லது சாலையின் ஓரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேனர் வைக்க கூடாது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வைக்க வேண்டும்.

அனுமதி இல்லாமல், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Leave a comment