யுத்தக் குற்ற இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் !

319 0

யுத்தத்தின் போது  கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேணடுமாயின்

யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு சிறைகளில் உள்ள இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இராணுவத்தினர் எவரும் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எமது நிலைப்பாடாகும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், யுத்தகாலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு பக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றன. தற்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றனர். அவ்வாறிருக்கையில் இராணுவத்தினர் மீது மாத்திரம் குற்றஞ்சுமத்துவது ஏற்கப்பட முடியாததாகும். சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமாயின் யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இராணுவ வீரர்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என இதுவரை காலமும் அனைத்துத் தரப்பினரும் மறுத்து வந்திருந்தனர். ஆனால் தற்போது ஜனாதிபதியின் கருத்தின் ஊடாக இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற மறைமுகமான பொருள் வெளிப்படுகின்றது. இது தொடர்பில் இராணுவத்தினரின் நிலைப்பாடு என்ன என்று வினவிய போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Leave a comment