434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

374 0

குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன்ற பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மேலும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதியை ஏற்படுத்தி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஆதார் பதிவு செய்திட, 13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோ மெட்ரிக் இயந்திரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1302 ஆதார் கிட்ஸ்களை 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கும் திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம், பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

இதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வசிக்கும் கிராமத்திலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவுகள் செய்யும் வசதியும் மற்றும் பொதுமக்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.

பூந்தமல்லியில் 2 கோடியே 48 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும் 10 கோடியே 59 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகக் கட்டடம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடங்கள், பகுதி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் சோதனை சாவடி கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

சென்னை ஆர்.கே. நகரில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை (வடகிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகக் கட்டடம்; வேலூர் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் முதல் தளத்தில் 98 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகக் கட்டடம், சேர்காட்டில் 16 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கணினி அறை, வரி மற்றும் இணக்கக் கட்டணம் செலுத்தும் கட்டண மேடை, வாகனம் நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சேர்காடு சோதனைச் சாவடி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்படும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். 

Leave a comment