மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறைந்தது

5237 0

Tamil_News_large_155133720160626205524_318_219மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடன் உதவி வழங்குவதை குறைத்துக்கொண்டன.பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பர். ஆரோக்கியமான குழுக்கள் மாதம் 4 முறை கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும். இது தொடர்பாக வங்கியில் கணக்கு வைத்து குழுவின் நடவடிக்கைகள் பற்றிய முழு விவரங்களையும் வங்கி அதிகாரிகளிடம் காண்பித்து கடன் பெறுவது வழக்கம்.

இதற்காகவே கடலுார் மாவட்டத்தில் மகளிர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 25ஆயிரம் மகளிர் குழுக்கள் உள்ளன. இது தவிர ஏராளமான தொண்டு நிறுவனங்கள் மூலம் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வங்கிகள் மூலம் சுழல் நிதியுடன் கடனுதவி அளிக்கப்பட்டன.

ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்கள் பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்ந்து கடன் பெற்றுள்ளனர். ஒரு குழுவிற்கு சுழல் நிதியாக 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இதில் ஒரு சில குழுக்கள் வியாபாரம் செய்து வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தி வங்கியில் நல்ல பெயரோடு உள்ளனர். பெரும்பாலான குழுக்கள் முறையாக பாராமரிப்பதில்லை. கூட்டமும் நடத்துவதில்லை. அதனால் நலிவடைந்த குழுக்களாக மாறிவிட்டன. வங்கிகளில் பெற்ற கடன்களை முறையாக திருப்பி செலுத்தாமல் வாராக் கடன்களாகிவிட்டன.

இதனால் சுய உதவிக்குழுக்கள் மீது இருந்த நல்லெண்ணங்கள் சிறிது சிறிதாக குறையத்துவங்கின. இத்தருணத்தில் சில தனியார் நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்களுக்கு மைக்ரோ பைனான்ஸ் வழங்கி வருகின்றன.

ஒரு சில தனியார் நிறுவனங்கள் சுயஉதவிக்குழுக்களுக்கு மொபைல் போன், தங்கம் போன்றவையும் இந்த மைக்ரோ பைனான்ஸ் மூலம் வழங்கி பெண்களை கவர்ந்து வருகின்றனர். அதேப்போல கடனையும் மிரட்டி வசூல் செய்துவிடுகின்றன.

இதனால் வங்கிகள் தாங்கள் வழங்கும் கடனுதவியை குறைத்துக்கொண்டன. வங்கிகளிடம் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் கடன் பெறுவது அரிதான விஷயமாக உள்ளது.

Leave a comment