யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

400 0

யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

குறிப்பான கிராம சேவகர் பிரிவுகளான ஜே-86 ஜே-87 ஜே 88 ஆகிய பகுதிகளில் உள்ள பொதுகட்டடங்கள் கைவிடப்பட்டுப் பராமரிக்காமல் உள்ள காடுமண்டிய காணிகளில் குறித்த போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டு, இளைஞர்கள் முதல் பாடசாலை மாணவர்கள் நுகர்வதைக் காண முடிகிறது.

இது தவிர கசிப்பு கஞ்சா என்பன தாராளமாக மேற்குறித்த பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல்களை வழங்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போதைப்பொருள் ஒரு வைரஸ் என்பது பலரும் அறிய வேண்டும். இன்று பல குடும்பங்கள் சின்னாபின்னமாக இருப்பதற்குக் காரணமே இந்தப் போதைப்பொருளாகும்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தை சேர்ந்த 10 மாணவர்கள் போதையூட்டிய பாக்கைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலை அதிபரால் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.இதுபோன்று யாழ்.நகரிலுள்ள வேறு சில பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் இவ்வாறு போதையூட்டிய பாக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் உட்படப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Leave a comment