பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணை மந்தம் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு

458 0

பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.
இதன் விளைவாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் பாகிஸ்தான் கோர்ட்டில் இந்த வழக்கு மிகவும் மந்தமாகவே விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும்கூட எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசலிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட போது, அது குறித்து பேச மறுத்துவிட்டார்.
ஆனால் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் இந்தியாதான் என பாகிஸ்தான் அரசு வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தால் ஒரு வாரத்தில் வழக்கு முடிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து தலைமை அரசு தரப்பு வக்கீலான சவுத்ரி அசார் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மும்பைக்கு வருவதற்கு பயன்படுத்திய படகை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்யவும், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டால், மும்பை தாக்குதல் வழக்கை முடிக்க ஒரு வாரம் கூட தேவையில்லை’ என்றார்.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மற்றொரு அரசு தரப்பு வக்கீலான அபுசார் பீர்சாதா, அடுத்த விசாரணை 28-ந்தேதி (நாளை) நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இது இரு நாடுகள் தொடர்புடைய வழக்கு என்பதால், இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
இதற்கிடையே வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் லக்வி உள்ளிட்ட குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை குற்றவாளிகள் தரப்பு வக்கீலான ராஜா ரிஸ்வான் அப்பாசிக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்ததுடன், அதனால்தான் குற்றவாளிகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் குற்றவாளிகள் விடுதலையாகும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இந்தியாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருக்கிறது.

Leave a comment