சர்வாதிகாரத்துக்கும் சனநாயத்துக்குமான போராட்டமா? மா.பாஸ்கரன். லண்டவ்- யேர்மனி

287 0

இலங்கைத்தீவிலே நடாளுமன்றமென்ற போர்வையுள் இருந்த பெரும்பான்மை இனத்துவச் சர்வதிகாரத்துக்கு சட்டவாக்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனாவால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாக்குவதையும் தவிர அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என்று முன்மொழிந்தவாறு பெருந்திமிரோடு சனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்தவர் இன்றிருந்திருந்தால், தனது கட்சிக்கே வெட்டுவிழுவதைப் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

இலங்கைத்தீவின் இன்றைய நிலையை ஏதோ சனநாயத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையேயான போராட்டமாகச் சிங்களப்பெருந் தேசியவாதக் கட்சிகள் மற்றும் குழுக்கள் ஒருபுறமும் தமிழர் தரப்புக் கட்சிகள் மற்றும் குழுக்கள் மறுபுறமுமாய் போர்க்கொடி தூக்கும் அதேவேளை மேற்கும் தனது பங்கிற்கு ஏதோ சனநாயகம் தளைத்தோங்கிய தேசத்தில், எல்லாம் சர்வாதிகாரத்துள் வீழ்ந்துவிட்டதாகத் தாம்தான் ஏதோ சனநாயகத்தின் காவலர்களாகக் கூப்பாடுபோடுவதானது நகைப்பிற்குரியதன்றி வேறொன்றுமில்லையெனலாம்.

இன்று இலங்கைத்தீவிலே ஏற்பட்டிருப்பது ஒன்றும் சனநாயகத்துக்கான போராட்டமல்ல.அரசுத் தலைவருக்கும் பிரதம அமைச்சருக்கும் இடையேயான அதிகாரப்போட்டியினால் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு. இந்தச் சூழ்நிலையானது குழம்பியகுட்டையில் மீன்பிடிக்கக் காத்திருந்த தூண்டிற்காரனுக்குச் சாதகமாகிவிட்டதென்பதே மெய்நிலை. இந்தச் சமச்சீரற்ற தென்னிலங்கை அரசியலிற் தமிழரது வாக்குப்பலத்தால் நாடாளுமன்றிலே எதிர்கட்சியாக இருந்து அரசையே எதிர்க்காத கட்சியாக இருப்போரும் சனநாயக ஒழுங்கவிதிகளைக் காற்றிலே பறக்கவிடும் ஆட்சியாளரைக் காத்திடவும், இன்னும் ஒரு சிலரோ தம்மைப் பணத்துக்கே விற்றுப்பிழைக்கும் நிலைக்குத் தரம்தாழ்ந்துள்ளமையைச் சனநாயகம் என்றும் சனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டம் என்பதையும் என்னவென்பது. உலக அரங்கிலே மக்களது வாக்குப்பலமென்பதே வினாக்குறியாகி வருகின்றமையை நாம் கண்டுவரும் சூழலில் இலங்கை நாடாளுமன்றமும் இன்று கேலிக்கூத்தாகியுள்ளது.

இங்கே சிங்களம் கட்சிகளாகவும் குழுக்களாகவும் பிரிந்துநிற்கும் சூழலை மதிப்பீடு செய்வதோடு, தமிழ்மக்களின் முதன்மைப் பிரச்சினையை எப்படி இந்த இடத்திலே கையாள்வது என்று சிந்திக்காது, மாறிமாறி ஆட்சிக்குவந்த சிங்களத் தலைமைகளைக் காக்கும் கவசங்களாகத் தமிழ்த் தலைமைகள்(?) மாறியுள்ளமை அறிவுபூர்வமானதா என்று சிந்திக்கவேண்டும். ஆட்சிமாற்றக் களேபரத்திலும் தமிழினத்துக்கு எதையும் கொடுத்துவிடக்கூடாதென்று உபதேசிக்கிறது ஒரு சிங்களப் புத்தியாளர் குழு. அதேவேளை தமிழ்பேசும் மக்களின் கணிசமான வாக்குப்பலத்தால் அரசுத்தலைவரான மைத்திரிபால சிறிசேனவோ இன்னும் ஒருபடிமேற் சென்று சமஷ்டி கிடையாது என்று கூறியதனூடாக எந்தவொரு சிங்களத்தலைமையையும் நம்பிப் பயனில்லை என்பதையும், தனது இனத்துவத்தின் உண்மை முகத்தை மைத்திரியும் நிரூபித்துள்ளார்.

எந்தவொரு சிறிய அரசியற் சூழலையும் தமிழனம் சார்ந்து பட்டறிவின்பாற் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தமிழ்த்தலைமைகள் வாழாதிருத்தல் குறித்துத் தமிழினம் விழிப்படையவும் வினாத்தொடுக்கவும் வேண்டும். ஏனென்றால், அரசியல்வாதிகள் மக்களை மந்தைகளாக்கித் தமிழர் தாயகத்தைத் தமது மேய்ச்சல் நிலமாகப் பார்க்கும் போக்கை மாற்றியமைக்காதவரை தமிழருக்கு விடிவோ விமோசனமோ கிடைக்காது.

இதே சனநாயக முகமூடிக்குள் இருந்தே இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. 75வீதத்துக் மேற்பட்ட சிங்களவர்களால் நிரப்பப்படும் இலங்கை நாடாளுமன்றிலே தமிழருக்கான சாதகமான தீர்வுகள் சாத்தியமா என்பதற்கு இந்த நாடாளுமன்றக் கலைப்பும் ஒரு எடுத்துக்காட்டு என்பதைத் தமிழினம் புரிந்துகொண்டு தொடர்த்தும் ஏமாந்து கொண்டிருக்காது, இதே சனாநாயவெளியை பயன்படுத்தி எமது தமிழினத்தின் பிரச்சினைகளை முன்னோக்கி நகர்த்துவதும் உலகை நோக்கித் திருப்புவதும் இன்றை தேவையாகும் என்பதைத் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தும்வகையிலே தமிழினம் சிந்திக்க வேண்டும்.
மா.பாஸ்கரன். லண்டவ்- யேர்மனி

Leave a comment