இலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி!

4695 0

இரு வாரங்களுக்கு முன்னர் தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்த பிறகு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.

அக்டோபர் 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க சர்ச்சைக்குரிய முறையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு மூண்ட அரசியல் நெருக்கடியில் தாங்கள் இருவரும் அவமானப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதைத் தடுப்பதற்காக வேறு வழியின்றியே சிறிசேனவும் ராஜபக்ஷவும் இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

விக்கிரமசிங்கவைப் பதவி நீக்குவதற்கு வசதியாக ‘ தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் ‘ இருந்து சிறிசேனவின் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறி உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதையடுத்து இலங்கை அரசியல் உறுதியின்மையில் சிக்கியிருக்கிறது.

பதவி நீக்கத்தின் சட்டபூர்வத்தன்மையை பல கட்சிகளும் கேள்விக்குள்ளாக்கியிருந்த நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை இடைநிறுத்தம் செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்ளைக் கட்சிமாறச் செய்து ராஜபக்ஷ தனக்கு பெரும்பான்மை ஆதரவைத் திரட்டிக்கொள்வதற்கு வசதியாக காலஅவகாசத்தை வழங்குவதே பாராளுமன்ற இடைநிறுத்தத்தின் நோக்கமாக இருந்தது.

225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் தலா சுமார் 100 உறுப்பினர்களைக் கொண்ட இரு தரப்பினரும் தங்களுக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக உரிமைகோரினார்கள்.ஆனால், 15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும்  6 உறுப்பினர்களையுடைய ஜனதா விமுக்தி பெரமுனவும் புதிதாக பதவியில் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டன்.

இதற்குப் பிறகு ராஜபக்ஷ பிரதமர் பதவியில் தொடருவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதாகியது.

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் கிடைக்கக்கூடிய தோல்விக்கு முகங்கொடுக்குமாறு ராஜபக்ஷவை ஜனாதிபதி கேட்டிருக்கவேணடும்.

அதற்குப் பிறகு தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மாத்திரமே தீர்மானித்தார்.

ஆனால், 2015 ஆம் ஆண்டில் சிறிசேன — விக்கிரமசிங்க நிருவாகத்தினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று நான்கரை ஆண்டுகள் கடப்பதற்கு முன்னதாக ( பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தீர்மானம் ஒன்றின் மூலம் கேட்டுக்கொள்ளாத பட்சத்தில்) பாராளுமன்றத்தைக் கலைப்பதை தடுக்கிறது.

இத்தகைய ஒரு அரசியலமைப்பு ரீதியான கட்டுப்பாடு இருப்பதற்கு மத்தியிலேயே சிறிசேன பாராளுமனறத்தைக் கலைத்திருக்கிறார்.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் இடைநிறுத்தம் செய்வதற்கும் கலைப்பதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது என்று உறுப்புரை 33 (2)(சி) யைச் சுட்டிக்காட்டி ஒரு மழுப்பல் அரசியலமைப்பு நியாயம்  முன்வைக்கப்பட்டது.

ஆனால், சில அதிகாரங்களைக் குறித்துரைக்கின்ற பொதுவான ஒரு ஏற்பாடு அந்த அதிகாரங்களின் மட்டுப்பாடுகளை வெளிப்படையாகக்கூறுகின்ற ( அரசியலமைப்பில் வேறு ஒரு இடத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கின்ற)விசேட ஏற்பாட்டை மேவிச்செல்லமுடியும் என்று கூறுவதைப்  புரிந்துகொள்வது  கஷ்டமானதாகும்.

இறுதியாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று மூன்று வருடங்களுக்கும் சற்று கூடுதலான காலமே கடந்திருக்கும் நிலையில் பாராளுமன்றத்தைக் கலைக்குமாறு உறுப்பினர்களிடம் வேண்டுகோளும் வரவில்லை.

அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாக  நாட்டு மக்களுக்குவழங்கப்பட்ட 2015 வாக்குறுதிகள் சிறிசேனவின் தற்போதைய நடவடிக்கைகளினால் கிரகணம் செய்யப்பட்டுவிட்டன.

அண்மைய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்  மலினப்படுத்தப்பட்ட விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது புதிய அரசியலமைப்பொன்றை வரையும் செயன்முறைகள் இனிமேலும் நம்பிக்கை தருபவையாக இருக்காமல் போகலாம்.எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சிறிசேன – ராஜபக்ஷவும் புதிய தேர்தலை வரவேற்றிருக்கின்றனர்.

தேர்தல் மக்களின்உண்மையான அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் என்று அவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள்.சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் ஜனநாயகமொன்றுக்கு மையக்கருவானவை என்பதில் சந்தேகமில்லை; ஆனால், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பாராளுமன்றத்தைக் கலைத்த பிறகு நடத்தப்படக்கூடிய தேர்தல் எந்தவகையிலும் சுதந்திரமானதாகவே,நேர்மையானதாகவோ இருப்பது சாத்தியமில்லை.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடுகின்றன.ஜனநாயகத்தை வலுப்படுத்தல் அல்லது எதேச்சாதிகாரத்துக்கு பின்வாங்கிச்செல்தல் என்ற இரண்டுக்கும் இடையே முக்கியமான தெரிவைச் செய்யவேண்டிய தீர்க்கமான ஒரு கட்டத்தில் இலங்கை இன்று நிற்கிறது.கடுஞ்சோதனையான பணியொன்று நீதித்துறைக்கு இருக்கிறது.

(இந்து ( ஆங்கிலம் ) ஆசிரிய தலையங்கம், 12நவம்பர் 2018)

Leave a comment