கஜா புயல் காரணமாக எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வங்காள விரிகுடாவின் மத்தியில் நிலைகொண்டுள்ள கஜா என பெயரிடப்பட்டுள்ள புயல் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு பக்கமாக தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது. 

இதேவேளை, யாழ். குடா நாட்டை அண்மித்த பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் ஊடாகக் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

இதேவேளை, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

அத்துடன், கிழக்கு கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் பொத்துவில் முதல் திருகோணமலை, காங்கேசன்துறையினூடாக மன்னார் வரையிலான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் ஐந்து கிலோ மீற்றர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் இந்த புயல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடலூருக்கும் – பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை மையம், ‘‘கஜா புயல் 5 கிலோ மீற்றர் என குறைந்த வேகத்தில் நகர்கிறது.

சென்னையில் இருந்து கிழக்கே 750 கிலோ மீற்றர் தொலைவிலும், நாகையில் இருந்து வடகிழக்கே 840 கிலோ மீற்றர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

மேற்கு – தென்மேற்கு நோக்கி நகரும் கஜா புயல் 15 ஆம் திகதி அதிதீவிர புயலாக வலுப்பெற்று பாம்பன் – கடலூர் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.