மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

507 0

Makesh Senanayakka_CIயாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்து உள்ளார்.  காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , பயங்கரவாதிகளிடம் இருந்து உங்கள் நிலங்களை பாதுகாத்து இன்றைய தினம் உங்களிடம் மீள கையளிப்பதில் மகிழ்சி அடைகின்றோம். இறுதி யுத்தத்தின் பின்பு 2009 தொடக்கம் இன்று வரை தேசிய பாதுகாப்பு யோசனையின் பின்பு பத்துக் கட்டமாக உங்கள் இடங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது.

நல்லிணக்கத்தை மேலும் மெருகூட்டுவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது உங்களது பாதுகாப்புக்காகவும் , இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் மெருகூட்டுவதற்காகவும், உங்கள் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். அத்துடன் நாங்கள் இங்கே நிலை கொண்டு இருப்பது உங்கள் பாதுக்காப்புக்ககாவே என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கே காணப்படும் பல்வேறு பட்ட பிரச்சனைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு எமக்கு நிச்சயமாக உண்டு. நிரந்தரமாகவும் உறுதியாகவும் இந்த பாதுக்காப்பை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம் என்பதனையும் கூறிக் கொள்கின்றேன்.

கடந்த 30 வருட காலமாக நாட்டில் ஏற்பட்ட யுத்தம் வடக்குக்கு மாத்திரமல்ல தெற்குக்கு மாத்திரமல்ல முப்படைகளும் இந்த யுத்தத்தை உணர்ந்தவர்கள் தான். எனவே மீண்டும் ஒரு யுத்தம் நாட்டில் ஏற்படாமல் அனைவருக்கும் பாதுக்காப்பு வழங்குமுகமாக எங்கள் சேவைகளை நாங்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றுகின்றோம்.

யாழ்.குடாநாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் முற்று முழுதான சுதந்திரம் கிடைத்துள்ளது. உங்கள் கடமைகளை சுதந்திரமாக செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதேபோன்று சில பகுதிகள் மீள கையளிகப்படுகின்றது. என மேலும் தெரிவித்தார்.

Leave a comment