சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 8பேரை நியமித்துள்ளனர்

160 0

tna-1தமிழர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 8பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை) முற்பகல் 10.00 மணியிலிருந்து 1.00 மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராசா, ரெலோ சார்பில் கோவிந்தம் கருணாகரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா, புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், சிவநேசன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சிறீலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம், வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே காணப்படும் முரண்பாடுகள், ஊழல், மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள், வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றம், வடக்கிற்கான சிறப்புப் பொருளாதார நிலையம் அமைப்பதில் காணப்படும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டன.

அத்துடன் அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, மீள் குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் முகமாக சிறீலங்கா அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளினதும் சார்பில் தலா இரண்டுபேர் படி 8பேர் அங்கம் வகித்துள்ளனர்.

தமிழரசுக் கட்சி சார்பில் இரா சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என்.சிறீகாந்தா, புளொட் சார்பில் சித்தார்த்தன், ராகவன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழு விரைவில் கூடி சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசுவதற்கான நடவடிக்கைகளில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.