வழக்கு விசாரணைகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இனிமேலும் அனுமதிக்கக்கூடியதல்ல-சம்பந்தன்

9694 0

பாராளுமன்றத்தில் சமர்பபிக்கப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்( Counter Terrorism Act ) அங்கீகரிக்கப்படுமாக இருந்தால் அதற்குப் பிறகு  அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படக்கூடிய எந்தவொரு நபருக்கும் எதிரான வழக்கு விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியிருக்கும் எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இதே நிலைப்பாட்டை ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் விடயத்திலும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறதென்றால், ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எவரையும் குற்றவாளியாகக் காணவோ அல்லது ஏன் குற்றப்தத்திரம் தாக்கல் செய்யவோ கூட முடியாது என்று அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்பதே அர்த்தமாகும் என்று குறிப்பிட்டார்.

‘ நிலைமை அவ்வாறானால், தடுப்புக்காவலில் உள்ள நபர்களும்  குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களும் கூட அவர்களுக்கு எதிராக வேறு சான்றுகள் இல்லாத நிலையில் அவர்களால் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை மாத்திரமே சான்றுகளாகக் கொண்டு அவற்றின் அடிப்படையிலேயே வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன என்று எடுத்துக்கொண்டு அவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தைக் கையாளவேண்டும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நோக்குகையில் ஒப்புதல் வாக்கு மூலங்களை அடிப்படையாகக்கொண்டு எவருக்கும் எதிராக குற்றப்பத்திரங்களைத் தாக்கல் செய்து வழக்குத்தொடுக்கமுடியாது என்பதை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஒப்புதல் வாக்கு மூலங்களின் அடிப்படையில் வழக்கு தொடுப்பது செல்லுபடியற்றது என்றும் சர்வதேச நியமங்களுக்கு இசைவானதல்ல என்றும் அரசாங்கம் கருதுகிறது என்பதே அர்த்தமாகும்.

‘ அதனால், வெறுமனே ஒப்புதல் வாக்கு மூலங்களின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகலரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருக்கிறார்களா அல்லது குற்றஞ்சாட்டப்பட்டு இன்னமும் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாகக் காணப்படவில்லையா என்பது ஒரு பிரச்சினையல்ல.ஆனால், அவர்களுக்கு எதிரான ஒரே சான்று அவர்களால் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சகலரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எனது வலியுறுத்தலாகும்.

இந்த விடயத்தில் உண்மையை உறுதிப்படுத்துவதிலும் அவர்களை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளிலும்  இழப்பீட்டு அலுவலகம் ஒரு பாத்திரத்தை வகிக்கமுடியும், வகிக்கவேண்டும் என்பதே எனது உறுதியான அபிப்பிராயமாகும்’ என்று சம்பந்தன் தனதுரையில் கூறினார்.

Leave a comment