அரசியலில் ரணிலுக்கு நுங்கு! மந்திரிக்கு மதுசாரம்!

26 0

தெற்கில் ரணிலைப் பதவியிலிருந்து வெளியேற்ற மைத்திரி திட்டமிடுகிறார். பிரதமர் கதிரையைக் கண்வைத்து மகிந்த காய்களை நகர்த்துகிறார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து ரணில் அரசியல் செய்கிறார். முதலமைச்சர் விக்னேஸ்வரனை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் கூட்டமைப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. இவர்களின் இயங்குதளத்தில் அரசியல் தீர்வு என்பது காணாமற் போய்விட்டது.

இலங்கையின் அரசியல் செல்நெறி தற்போது கலங்கிய குட்டையாக மாறியுள்ளது.
ஒவ்வொருவரும் இதற்குள் தாம் விரும்பியவாறு மீன் பிடிக்கலாமென காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கள அரசியல்வாதிகளிடையே மூன்று பெருந்தலைகள் ஆட்டம்போடத் தொடங்கியுள்ளன.
தமிழர் தரப்பில் வயோதிபத் தலைமை தூங்கிக்கொண்டிருக்க, பிந்தி வந்த வந்த கொம்பு தலைதூக்கித் தாண்டவமாடுகிறது.

தங்களிடம் மக்கள் ஒப்படைத்த பணி, கடமை, அரசியல் வழிநடத்தல், தலைமைப்பண்பு என்பவற்றை மறந்து வடமாகாண முதலமைச்சரின் எதிர்கால அரசியலைச் சூனியமாக்குவதில் இவர்கள் காலத்தைப் போக்குகின்றனர்.

ஒருவகையில் பார்த்தால் சிங்களத் தரப்பும் தமிழர் தரப்பும் தங்களின் வாக்குவங்கிகளைக் காப்பாற்றுவதற்காக அப்பாவி மக்களின் கவனத்தை திசைதிருப்புவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அங்குள்ள சில ஊடகங்கள் கட்சி பிரிந்து போட்டி அடிப்படையில் பொய்களைப் பரப்புகின்றனவோ என எண்ணத்தோன்றுகிறது.

மக்களின் கவனத்தைத் திசைதிருப்புதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆழப்பார்ப்பது மிகச் சுவையானது.

உதாரணத்துக்கு கடந்த இரண்டு வார காலத்தில் வெளிவந்த பரபரப்பான செய்திகளைப் பார்க்கலாம். பரபரப்பானது என்பது இருவகைப்பட்டது.

செய்தியே கிளர்ச்சிப் பாங்கான பரபரப்புடையதாக அமைவது ஒன்று. சாதாரண ஒரு செய்தியைத் திட்டமிட்டு அலங்கரித்துப் பரபரப்பாக்குவது அடுத்தவகை.

இப்போது இலங்கையில் வெளிவரும் பரபரப்புச் செய்திகள், மேற்சொன்ன இரண்டு வகைகளில் எவ்வகையானது என்பதை சாதுரியமான வாசகர்கள் அறிந்துகொள்வர்.

பரம வைரிகளாக நடந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் தனிமையில் சந்தித்து விரிவாக உரையாடி இடைக்கால அரசொன்றை அமைக்க முன்வந்துள்ளதாக கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகையொன்று பரரபரப்பான செய்தி வெளியிட்டது.

ஈ அடிச்சான் கொப்பி பாணியில் இதனை மற்றைய சகல பத்திரிகைகளும் இணையத்தளங்களும் அச்சொட்டாக மறுபிரசுரம் செய்தன.

மகிந்தவின் வழிநடத்தலில் இயங்கும் பொதுஜன பெரமுனவும், மைத்திரியின் தலைமையில் இயங்கும் சுதந்திரக் கட்சியும் இணைந்து இடைக்கால அரசொன்றை அமைக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக மூலச் செய்தி தெரிவித்தது.
இச்செய்தியின்படி, ஐக்கிய தேசியக் கட்சியை கூட்டரசிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, மைத்திரி – மகிந்த அணிகள் இணைந்து இடைக்கால ஆட்சியை அமைப்பதெனக் கூறப்பட்டது.
மகிந்த ராஜபக்சவும் எஸ்.பி.திசநாயக்கவும் இந்தச் செய்தியை அடியோடு மறுத்ததோடு, கற்பனையின் உச்சம் எனவும் கூறினர். இதனை எழுதும்வரை மைத்திரி தரப்பு இச்செய்தி தொடர்பாக எதுவும் கூறவில்லை.

ஆனால், சந்திப்பில் பேசப்பட்டது என்று சொல்லப்படும் அத்தனை விடயங்களையும்; பத்திரிகைகள் பிரசுரித்துவிட்டன. அப்படியானால், செய்தியை மறுத்தவர்கள் பொய்யர்களா? அல்லது மௌனம் காப்பவர்கள் பொய்யர்களா? எப்படிக் கண்டுபிடிப்பது.

இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று கூறி தப்பிவிடுவதற்கு இது சாதாரண விடயமல்ல.
சில வாரங்களுக்கு முன்னர் சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் கதிரையில் காதல்கொண்டு கவிண்டு விழுந்த மகிந்த, இப்போது பிரதமர் பதவியைக் கண்வைத்து காய்களை நகர்த்துகிறார்.
இதற்கான பதிலடி உடனடியாக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து வந்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் சேர்த்து தங்களிடம், 122 உறுப்பினர்கள் இருப்பதால் தங்களை எவராலும் அசைக்கமுடியாதென இவர்கள் சவால் விட்டுள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 122 என்பது அறுதிப் பெரும்பான்மைதான்.

இந்த இழுபறி இவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்க, மகிந்தவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ச அடுத்த குண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.  சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரியை தாம் சந்தித்து உரையாடியதாகக் கூறியுள்ள இவர், அதன் விபரங்களைக் கூற மறுத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பசில் என்ற செய்தி காற்றில் பறந்துகொண்டிருக்கும் சமகாலத்தில், இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் செய்தியைக் கூட மைத்திரி தரப்பு இன்னமும் மறுக்கவில்லை.

2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி 6,217,162 (51.8 வீதம்) வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றிபெற்றார்.

2010 செப்ரம்பரில் மகிந்த கொண்டுவந்த 18ஆவது அரசியல் திருத்தம் அவரை மூன்றாம் தடவையாகவும் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கொடுத்தது. இவருக்கு 5,718,090 (47.58 வீதம்) வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

முழுமையான தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே தமது தோல்வியை ஏற்றுக்கொண்ட மகிந்த, ரணிலின் உதவியோடு இராணுவ ஹெலிகொப்ரரில் இரவோடிரவாக அப்பாந்தோட்டைக்குப் பறந்துவிட்டார்.

2015 ஜனாதிபதித் தேர்தல் முடிவு தொடர்பான ஒரு முக்கிய தகவல் இங்கு கவனிப்புக்குரியது.
மகிந்தவுக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 58 வீதமானவை சிங்களவர்களால் வழங்கப்பட்டவை.

வெற்றிபெற்ற மைத்திரிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளில் 84 வீதமானவை சிறுபான்மையினருடையவை. அதாவது, தமிழர் மற்றும் இஸ்லாமியரது வாக்குகளே 84 வீதம்.
ஆக, இங்கு தெரியவருவது என்னவெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலானது சிங்களவர்களது வாக்குகளும், சிறுபான்மையினரது வாக்குகளும் ஒன்றையொன்று நேரடியாக எதிர்கொண்டன என்பதுவே.

இதனை மேலும் நுணுக்கமாகப் பார்க்கின், இனப்படுகொலைச் சூத்திரதாரியான மகிந்தவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென தாயகத் தமிழர்கள் ஒன்றுபட்டு அவரை தோற்கடிப்பதற்காகவே மைத்திரிக்கு வாக்களித்தனர. இது ஒரு வரலாறு.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறான மனோநிலையில் தமிழர்கள் வாக்களிப்பார்களா என்பதே இப்போது முனைப்புப் பெற்றுள்ள கேள்வி.

தற்போதய கூட்டாட்சியில் கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டுவருவது கண்கூடு.
ரணிலைக் கைவிட்டு மைத்திரி மகிந்தவின் கூட்டுக்குச் சென்றால் எந்தத் தரப்புக்கு அமோக வாக்குகள் கிடைக்கும்.

கூட்டமைப்பு கேட்டாலும் இவர்களுக்கு தமிழர்கள் இனிமேல் வாக்களிக்கமாட்டார்கள்.
அப்படியானதொரு அரசியல் நிலைமை உருவாகுமானால், கூட்டமைப்பின் ஆதரவுடன் ரணிலும், மகிந்தவின் ஆதரவுடன் மைத்திரியும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடநேரின் வெற்றிவாய்ப்பு யாருக்கானது?.

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை பெருமளவு இழந்துவிட்டனர்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனை, புதிய அரசியலமைப்பு, தமிழர் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு, ஜெனீவாத் தீர்மான நடைமுறை, சர்வதேசப் பங்களிப்பு என்ற சகல விடயங்களிலும் ரணில் – மைத்திரி அரசு கூட்டமைப்பினரை நம்பவைத்து ஏமாற்றியுள்ளது.
அண்மைக்கால சம்பந்தனதும், சுமந்திரனதும் உரைகள் கொஞ்சம்கொஞ்சமாக அரசாங்கத்தை விமர்சிப்பதாக மாறியுள்ளது.

ஆனாலும் ரணில் தரப்பின் மீது மென்போக்கையே கூட்டமைப்பு கடைப்பிடிக்கிறது.
பிரதமர் ரணிலுக்கு சுமந்திரன் பனைமர நுங்கு வெட்டி சுவைக்கக் கொடுத்து மகிழ்கின்றார்.
ஊடகவணிகம் செய்யும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சிங்கள அமைச்சர் ஒருவருக்கு மதுசாரம் கொடுத்து மனம் பூரிக்கிறார்.

நுங்கு கொடுப்பதில் தவறில்லை, ஆனால் மதுப்புட்டி உடைப்பது தவறு என்பது சுமந்திரனின் சித்தாந்தம். தமிழரசின் கொள்கையே மதுவுக்கு எதிரானது என்கிறார் மாவையர்.
இதனை நேரடியாக தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் வைத்து இவர்கள் தெரிவித்ததால,; ஊடக வணிகரான அரசியல்வாதி திகைத்துப்போயுள்ளார்.

இதற்கிடையில் வடமாகாண சபையின் இறுதி நாள் நெருங்கிவிட்டது. இம்மாதம் 25ம் திகதியுடன் இது நிறைவடைகிறது.  அடுத்த மாகாணசபைத் தேர்தல் எப்போது என்று எவருக்கும் தெரியாது. அதுவரை ஆளுனர் ஆட்சியே இடம்பெறப்போகிறது.

ஆளுனர் ஆட்சியின் போது தமிழருக்கு சுபீட்சகாலம் என்று அவரது எடுபிடிகள் கூவத்தொடங்கிவிட்டனர்.  இதற்கு ஏதுவாக ஆளுனர் கூரே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று தமக்கு விசுவாசமான தமிழர்கள் சிலரை சந்தித்துப் பேசிவருகிறார்.

கடந்த வாரம் லண்டன் சென்ற பிரதமர் ரணில் வடக்கில் ராணுவம் இருப்பதை தமிழர் விரும்புவதாக சொன்னதுபோல, ஆளுனர் கூரேயும் நாடு திரும்பியதும் இப்படியான புலுடா எதையாவது அவிட்டுவிடுவார்.

விக்னேஸ்வரன் போனால் போதும் என்ற நினைப்பில், நடப்பவைகள் எதையும் தெரியாதவைகள் போல கண்களையும், காதுகளையும், வாயையும் மூடியவாறு ‘குரங்கு’ அரசியலை எவ்வளவு காலத்துக்கு கூட்டமைப்பு நடத்தப் போகிறது?

பனங்காட்டான்

Related Post

வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்! -பி.மாணிக்கவாசகம்

Posted by - July 12, 2018 0
உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல்…

மகிந்தவும் மைத்திரியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

Posted by - November 20, 2017 0
நாட்­டின் அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 9ஆம் திகதி மூன்­றாண்­டு­கள் நிறை­வு­பெ­ற­வுள்­ளது.

தமிழீழ விடுதலை வானில் கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஒளியேற்றியிருக்கும் கேப்பாபிலவுப் போராட்டம்! – இரா.மயூதரன்!

Posted by - February 17, 2017 0
பரம்பரை பரம்பரையாக எமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்துவந்த எம்மை எமது சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடித்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையவிடும் கொடுமை முடிவின்றித் தொடர்ந்துவருவதன் அண்மித்த…

கோத்தாவின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு ஆபத்தானது!

Posted by - February 2, 2019 0
நான் கட்சி தலைமையை பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 40 ஆவது ஜெனிவாக் கூட்டத் தொடரில் நிச்சயமாக புதிய பிரேரணை வரும். இந்தியா மௌனமாக இருந்தாலும் தனது…

தமிழரின் கடல்களை மட்டுமல்ல நிலங்களையும் ஆக்கிரமிக்கும் கடற்படை

Posted by - August 10, 2016 0
வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் நிரந்தரமாகக் கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்ட நிலப்பகுதியை அளவீடு செய்து அவற்றின் எல்லைகளைக் குறிப்பதற்காகச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரிகள் கடந்த…

Leave a comment

Your email address will not be published.