காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டேன்-நீதிமன்றில் சாட்சி வழங்கிய நபர்

207 0

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை எனவும் நபர் ஒருவர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் நேரில் கண்ட பெண் ஒருவர் பலாலி இராணுவ முகாமுக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார் என்றும் அந்தப் பெண் தற்போது இறந்துவிட்டார் என்றும்  இளைஞன் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

அதேவேளை வழக்கு நேற்று விளக்கத்துக்கு வந்த போது,  5ஆவது பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில்  மூத்த அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையானார்.

அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது,  இந்த வழக்கில் மனுதாரரால் முற்படுத்தப்பட்ட கண்கண்ட சாட்சியிடம் அரச சட்டவாதி குறுக்குவிசாரணையை முன்னெடுத்தார்.

யாழ்ப்பாணம் அரியாலை துண்டி இராணுவ முகாமுக்குள் இளைஞர் சென்றதை அவதானித்தேன். அவரை மறுநாள் காலை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்” என்று குறுக்குவிசாரணையின் போது கண்கண்ட சாட்சி சாட்சியமளித்துள்ளார்.

Leave a comment