ஜெ, மரணம் குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும் – சசிகலா தரப்பு வலியுறுத்தல்

1769 0

இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து இடைக்கால அறிக்கையை ஆணையம் வெளியிட வேண்டும் என்று சசிகலா தரப்பு வக்கீல் வலியுறுத்தி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது அவர், ‘22.9.2016 அன்று இரவு 9.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர இருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வருமாறு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மேலாளர் எனக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வந்தேன். நான் மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் ஜெயலலிதாவை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மருத்துவமனை வந்து சேர்ந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்ற, இறக்கமாக இருந்தது. தற்காலிகமாக அவருக்கு இதய துடிப்பை சீராக்க பேஸ் மேக்கர் பொருத்தினோம்’ என்று சாட்சியம் அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட தகவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு 22.9.2016 அன்று இரவு 10 மணிக்கு தான் தெரிவிக்கப்பட்டது என்று அப்பல்லோ மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோர் ஏற்கனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் சத்தியமூர்த்தி இரவு 9.45 மணிக்கு தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக சாட்சியம் அளித்தது குறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

அதற்கு மருத்துவர் சத்தியமூர்த்தி, உத்தேசமாக இரவு 9.45 மணி இருக்கும் என்றும், அதுதான் மிகச்சரியான நேரம் என்றால் சரியல்ல என்றும் பதில் அளித்தார்.

உடனே கோபம் அடைந்த நீதிபதி ஆறுமுகசாமி, ஏன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். மருத்துவர் சத்தியமூர்த்தியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.

இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் உள்பட 4 பேரை ஆணையம் விசாரிக்க வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஜோசப் என்பவர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரையும் விசாரிப்பது குறித்து ஆணையம் இதுவரை முடிவு செய்யவில்லை. அவ்வாறு முடிவு செய்யாதபோது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஒருவேளை அவர்களை விசாரிக்கக்கூடிய தருணம் வரும்பட்சத்தில் மனுதாரர் ஜோசப் மனு தாக்கல் செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம்’ என்று கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

விசாரணை முடிவடைந்து வெளியே வந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, ‘22.9.2016 அன்று ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் 4.12.2016 அன்று ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது வரை என்ன நடந்தது என்பதை அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலமாக ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் ஆணையமே இடைக்கால அறிக்கை வெளியிட்டால் சரியாக இருக்கும்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது பழச்சாறு குடிப்பது போன்ற வீடியோ பதிவை வெற்றிவேல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வீடியோ பதிவு இதுவரை ஆணையத்தால் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. அந்த வீடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி அது உண்மையானதா போலியானதா என்பதை கண்டறிந்து அதையும் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்’

Leave a comment