பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்

228 0

 ஒலுவில் துறைமுக கடற்தொழிலாளர்கள் தமக்கான தீர்வை வழங்குமாறு தெரிவித்து அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு பிரதான வீதியை மறித்து இன்று(08-10-2018)பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஒலுவில் துறைமுகத்தின் வாயலில் குவிந்துள்ள மணலை அகற்றுமாறு தெரிவித்து கடந்த இரு தினங்களாக மீனவர்கள் துறைமுகம் முன்பாக போராட்டம் நடத்தி வந்ததை அடுத்து இன்று(08)திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகம் முன்பாக பிரதான வீதியில் மீன்பிடி படகுகளை வைத்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இப்போராட்டத்தின் காரணமாக கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதியூடான போக்கு வரத்து தடைப் பட்டுள்ளதனை அடுத்து பொலிஸார் உள்வீதியூடாக மாற்றுப் பாதை ஊடாக போக்கு வரத்தினை மாற்றி அமைத்தனர்.

இதனால் பாரிய கனரக வாகனங்கள், பஸ், லொறி போன்ற வாகனங்கள் குறித்த வீதியால் பயணிக்க பெரும் சிரமத்தினை எதிர் கொண்டதுடன் காரியாலயம் செல்லும் ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கினர்.

துறைமுகத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற வந்திருந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதனை அடுத்து கடற்தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கல்முனை முதல் பொத்துவில் வரை சுமார் 2 ஆயிரத்து 800 மீனவர்கள் இத்துறைமுகத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள தடையினால் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Leave a comment