‘அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ டிரம்ப் திட்டவட்டம்

770 0

அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கும், அவர்களை ஆதரிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கொள்கையை டிரம்ப் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், ‘பயங்கரவாத எதிர்ப்பு தேசிய கொள்கை வழிகாட்டுதலின்படி, எங்கள் பெரிய தேசத்தை பாதுகாப்பதற்கு அமெரிக்க வல்லரசின் அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்துவோம். அந்தவகையில் அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ என்று தெரிவித்தார்.

தேசத்துக்கு எதிராக அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், 2011–ம் ஆண்டு முதல் நாடு மேற்கொண்டு வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை கோடிட்டு காட்டுவதாக கூறிய டிரம்ப், அனைத்து பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும் அமெரிக்காவை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கவும் இந்த கொள்கை வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.

டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை வரவேற்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், இது முந்தைய ஒபாமா நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட கொள்கையை விட முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:–

இந்த புதிய கொள்கை ஒரு பயங்கரவாத எதிர்ப்பு அணுகலை திறம்பட உருவாக்கி உள்ளது. இது நிலையானது மற்றும் அதிக திறமையானது. ஏனெனில் முன்னெப்போதையும் விட உலக அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் மிகவும் சிக்கலாகஸ்ஸ்வும், பரவியும் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் இந்த பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையானது, எங்களை அச்சுறுத்தும் அனைத்து பயங்கரவாதிகளிடம் இருந்தும் நாட்டை காப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது.

இந்த கொள்கைப்படி வெறும் ஒரு அமைப்பை மட்டும் அமெரிக்கா முன்னிறுத்தாது. மாறாக அமெரிக்காவின் குடிமக்கள் மற்றும் அதன் நலன்களை தாக்கும் திறன் மற்றும் நோக்கம் கொண்ட அனைத்து பயங்கரவாதிகளையும் அமெரிக்கா எதிர்க்கும்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகளை எதிர்ப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பயங்கரவாதிகளுக்கு, பயணம் மற்றும் சர்வதேச எல்லைகள் வழியாக தொடர்புகளை மேற்கொள்ளும் சுதந்திரத்தை நாங்கள் மறுப்போம். அத்துடன் ஆன்லைன் வழியாக ஆள்சேர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் கட்டுப்படுத்துவோம்.

இதைப்போல தேசப்பாதுகாப்பு, தாக்குதல்களை தடுத்தல், தாக்குதல்களின் தாக்கத்தை தணித்தல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், எல்லைகளை பலப்படுத்துதல், துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு, தயார்நிலை கலாசாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கும் இந்த புதிய கொள்கை ஊக்கமாக அமையும்.இவ்வாறு ஜான் பால்டன் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பொருளாதார எதிர்ப்பு கொள்கையை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மற்றும் ராணுவம், உளவுத்துறை நிறுவனங்களும் வரவேற்றுள்ளன.

Leave a comment