விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு

497 0

fish_2909708fவிசைப்படகு பழுதால் நடுக்கடலில் கடந்த 6 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 11 மீனவர்கள், கடலோரக் காவல் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற இவர்கள் கடந்த 20ஆம் திகதி கரை திரும்பியிருக்க வேண்டிய நிலையில், கரைக்குத் திரும்பவில்லை.
படகின் உரிமையாளர் ரவிச்சந்திரன், கடலில் இருந்து திரும்பிய மற்ற விசைப்படகு மீனவர்களிடம் விசாரித்தும், அவரது படகு குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மீன்துறை மற்றும் கடலோரக் காவல் படைக்கு ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்திய கடலோரக் காவல் படையினர் கடந்த 23ஆம் திகதி ஹெலிகாப்டரில் சென்று கடலுக்குள் படகைத் தேடினர்.
அவர்களின் தேடுதலில் சீர்காழியை அடுத்த பழையார் துறைமுகத்தில் இருந்து 85 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மோட்டார் பழுதானதால் நகர முடியாமல் அந்தப் படகு தத்தளித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன் பின்னர், கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘அமிகா’ கப்பல் கடலுக்குச் சென்று நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப் படகையும், மீனவர்களையும் மீட்டுக்கொண்டு நேற்று காரைக் கால் துறைமுகத்துக்கு வந்தது.
அங்கிருந்து மீனவர்கள், விசைப்படகுடன் நேற்று மதியம் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

Leave a comment