28ஆவது தேசிய இணக்க தினம் நாளை அலரி மாளிகையில்!

218 0

28ஆவது தேசிய இணக்க தின நிகழ்வு நாளை காலை 9 மணிக்கு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெறுகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி தேசிய இணக்க தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையிலே இம்முறை ஜனாதிபதி தலைமையில் இன்றைய தினம் அலரி மாளிகையில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இன்றைய தினம் இணக்கசபையின் www.midiation.gov.lk என்ற  புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்  செய்துவைக்கப்பட இருப்பதாக இணக்கசபை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்றைய நிகழ்வில் இணக்க பிரதான சபையின் தலைவர்கள் மற்றும் இரண்டாயிரம் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் அனைத்து மாவட்டங்களும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்  தொடர்ந்து 25வருடங்கள் இணக்க சபையில் சேவை செய்த இணக்கசபை உறுப்பினர்கள் 360பேர் கெளரவிக்கப்படவுள்ளனர்.

மேலும் 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இணக்க பிரதான சபையில் சேவை செய்வதற்காக நியமனக்கடிதம் வழங்கப்பட்டு தொடர்ந்தும் சேவை செய்துவரும் இணக்க உறுப்பினர்கள் 7 பேர் விசேட கெளரவத்துக்கு ஆளாக்கப்படவிருக்கின்றனர்.

இணக்கசபை முறைமை ஆரம்பிக்கப்பட்ட தினம் முதல் 28வருடங்களாக அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு  தேசிய பணியை மேற்கொண்டுவரும் இணக்கசபை உறுப்பினர்களை கெளரவிக்கும் முகமாக இணக்க தினம் வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு வரும் சாதாரண பிரச்சினைகளை தீர்க்கும் மாற்று திட்டமாக இணக்க முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இணக்கசபை சட்டத்தின் பிரகாரம் இரண்டு பிரிவினர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு மத்தியில் இடம்பெறும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக  மூன்றாவது பிரிவினராக இணக்க உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அதற்காக மூன்று வருட காலத்துக்கு ஜனாதிபதியினால் 5 உறுப்பினர்கள் கொண்ட இணக்கசபை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும்.

Leave a comment