அவசரமாக பாராளுமன்றத்தை கூட்டும் கோரிக்கை பிரதமரிடம் அனுப்பி வைப்பு

411 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு அது தொடர்பில் ஆராய்வதற்காக அவசர பாராளுமன்ற கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவசர அமர்வினை கூட்டும் அதிகாரம் பாராளுமன்றத்தின் நிலைக்கட்டளை 16 இன் படி பிரதமர் ரணில் விகிரமசிங்கவிடமே காணப்படுகின்றது. எனினும் சபாநாயகர் அக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எதிரான கொலை சதி மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி நிலை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்வதற்காக அவசர பாராளுமன்ற அமர்வினை நடாத்துமாறு கூட்டு எதிர்க்கட்சி  கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்ற அமர்வுகள் ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்னர் அவசர அமர்வினை நடத்தி பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment