மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து

238 0

மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததற்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. 

மதுரை ஆதீன மடம் 2,500 ஆண்டுகள் பழமையானது. இந்த மடத்தின் 292-வது மடாதிபதியாக கடந்த 1980-ம் ஆண்டு முதல் அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நித்யானந்தா நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மணிவாசகம், சாமி தியாகராஜன் ஆகியோர் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுக்களை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதே கோர்ட்டில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘என்னை மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடருவது குறித்து முறைப்படி அறநிலையத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் மனுதாரர்கள் அறநிலைய துறையினரிடம் அனுமதி பெறவில்லை. எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்‘ என்று கூறியிருந்தார். ஆனால் நித்யானந்தாவின் மனுவை கடந்த 2014-ம் ஆண்டு மதுரை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நித்யானந்தா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்த தீர்ப்பு வருமாறு:-

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு அறநிலையத்துறை சட்டப்படி அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் கீழ்கோர்ட்டில் நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் முறையாக அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை. அதன்படி நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக கீழ்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment