ஆப்கானிஸ்தானில் பீரங்கி தாக்குதல் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

10014 0

ஆப்கானிஸ்தானில் பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். 

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள கபிசா மாகாணம், தகாப் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

அப்போது அல்மாஸ்கேல் என்ற கிராமத்தில் ஒரு பீரங்கி குண்டு, குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகாப் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி முகமது நயீம் சபி கூறும்போது, “இந்த மாவட்டத்தில் பல இடங்களிலும் தலீபான்களுக்கும், பாதுகாப்பு படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. இதில் அல்மாஸ்கேல் கிராமத்தில் பத்ராப் பகுதியில் ஒரு பீரங்கி குண்டு விழுந்து பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என அவர் குறிப்பிடவில்லை.

அந்தப் பகுதியில் வசித்து வருகிற ஹாஜி கலீல் என்பவர் கூறும்போது, “வீடுகள் மீது பீரங்கி குண்டுகள் விழுகின்றன. இதில் பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அல்மாஸ்கேல் கிராமத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி விட்டனர் என கூறி உள்ளார்.

Leave a comment