19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்

39 2

19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1999-ம் ஆண்டு நடந்த பேரணியின் போது நடந்த தாக்குதலில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தலத் அஜீசின் பாதுகாப்பு அதிகாரி சத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்டார். இதற்கு யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினர் தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.

சத்யபிரகாஷ் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில் யோகி ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டில் தலத் அஜீஸ் மனுதாக்கல் செய்தார். ஆனால் போதிய ஆதாரம் இல்லை என கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் லக்னோ ஐகோர்ட்டில் தலத் அஜீஸ் மேல்முறையீடு செய்தார்.

மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி லக்னோ ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தற்போது முதல்-மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜனதா கட்சியினருக்கு மகாராஜ்கஞ்ச் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து முதல்-மந்திரி பதவியில் இருந்து யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

There are 2 comments

Leave a comment

Your email address will not be published.