ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் மீது தாக்குதல் முயற்சி!

265 0

கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்க முற்பட்டார் என கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி காவல்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யபட்டு உள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த முருகையா தமிழ்செல்வன் எனும் சுயாதீன ஊடகவியலாளர் மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த வேளை வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவர் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து உள்ளார். பின்னர் வீட்டில் இருந்தவர்களையும் ஊடகவியலாளரையும் அச்சுறுத்தி சென்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரைச்சி பிரதேச சபை தவிசாளரான அ. வேழமாலிகிதன் கடந்த சில வாரங்களாக ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற கரைச்சி பிரதேச சபை அமர்வின் போது, சபையை பற்றி சில ஊடகவியலாளர்கள் கடுமையாக விமர்சித்து செய்தி அறிக்கையிடுவதனால் , சபையினை திறம்பட இயங்க செய்ய முடியவில்லை. அதனால் ஊடகவியலாளர்களின் அத்தகைய செயற்பாடுகளை தான் கண்டிப்பதாகவும் அவ்வாறான ஊடகவியலாளர்கள் தொடர்பில் அவர்கள் கடமையாற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களுக்கு தான் கடிதம் எழுத உள்ளதாகவும் சபையில் பகிரங்கமாக தெரிவித்தார்.

அந்நிலையிலையே கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற கரைச்சி பிரதேச சபையின் விசேட அமர்வில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்க தவிசாளர் மறுத்திருந்தார். இந்நிலையில் கிளிநொச்சியில் உள்ள சுயாதீன ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டு உள்ளார்.

Leave a comment