பசில் தாக்கல் செய்துள்ள மனு டிசம்பர் விசாரணைக்கு

221 0

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படுகின்ற தனக்கெதிரான வழக்கை வேறொரு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து , முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்வரும் டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் வரை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் சீல் துணி விவகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பளித்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து நீதிமன்றத்தில் கருத்து வௌியிட்டார் எனவும் இதுபோன்ற கருத்துக்களை கூறும் நீதிபதியிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது எனவும் தனது மனுவில் பஷில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தனக்கு எதிரான வழக்கை பிறிதொரு நீதிபதியிடம் மாற்ற உத்தரவிடுமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியைப் பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவத்துடனான சுமார் 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டதாக பஷிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment