பல வருடங்களாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாளை வவுனியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் எவ்வித பேதமின்றி பங்கேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி சிறைச்சாலைகளில் எமது உறவுகள் தமிழ் அரசியல் கைதிகள் என்னும் பெயர் பலகையுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பல தடவைகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களையும் சாகும் வரையிலான உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கிவருகின்ற போதும், தற்போது வரையில் அவர்களின் விடுதலை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளும் காற்றில் பறந்தவையாகவே உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறையில் நீண்டகாலமாக தமது வாழ்க்கைக் காலத்தை தொலைத்துவிட்ட நிலையில் எஞ்சிய காலத்தை தங்களது உறவுகளுடன் செலவிடுவதற்காகவே விடுதலைக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பொதுமன்னிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு விசாரணைகளும் தாமதமாகி வருகின்ற நிலையில், ஆகக்குறைந்தது புனர் வாழ்வளித்தாவது தம்மை விடுதலை செய்யுங்கள் என்றே அவர்கள் கோரிவருகின்றனர். இவர்களின் போராட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமும் அவர்களுக்கு முற்றுகொடுத்துக்கொண்டிருக்கும் தரப்பினர்களும் பராமுகமாகவே இருக்கின்றனர்.
உண்ணாவிரதமிருக்கும் அவர்களுக்கு பலம் சேர்க்கும் வரையிலும் வாக்குறுதிகளை மறந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும் அத்தனை அரசியல் சக்திகளுக்கு அழுத்தங்களை வழங்கும் முகமாகவும் நாளை சனிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ள கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவை நல்குவதுடன் அனைவரையும் எந்த வித பேதங்களுமின்றி பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
சிறையில் வாடும் எமது அத்தனை உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜனநாயக கடமையை அனைத்து தரப்பினரும் ஏற்று அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

