பாலியல் பலாத்காரச் செய்திகளை பரபரப்பாக வெளியிடாதீர்கள்: ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

270 0

பிஹார் மாநிலம் முசாபர்பூர் விடுதியில் சிறுமிகளுக்கு நடந்த பலாத்காரச் செய்திகளை வெளியிட ஒட்டுமொத்தத் தடை ஏதும் இல்லை, அதேசமயம், பாலியல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியது.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் பிரிஜேஸ் தாக்கூர் என்பவர் நடத்திய விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளில் 30க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக விடுதி நடத்திய பிரிஜேஷ் தாக்கூர் உள்பட 11 பேர் கடந்த மே 31-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளங்கள், பேட்டிகள் போன்றவற்றை சில ஊடகங்கள் வெளியிட்டன, மேலும், விசாரணை விவரங்களும் வெளியாகின. இதையடுத்து, பாட்னா உயர் நீதிமன்றம், முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பான செய்திகளை யாரும் வெளியிடக்கூடாது என்று தடை விதித்து, புதிய சிபிஐ குழு அமைக்கவும் கடந்த மாதம் 23-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன்பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் சேகப் நாப்டே ஆஜராகினார்.

நீதிபதிகள் கூறுகையில், ”பாலியல் பலாத்காரச் செய்திகளையும், பாலியல் தாக்குதல்கள், சீண்டல்கள் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க, வெளியிட ஊடகங்களுக்கு ஒட்டமொத்தமாக எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. ஆனால், அதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் கையாளும் போது பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, பரபரப்பாக வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், முகவரிகள், புகைப்படங்கள், முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்கள், அடையாளங்கள் எதையும் பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி வெளியிடக்கூடாது.

இந்த விவகாரத்தில் உதவ பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் மற்றும் செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு ஆகியவை தங்களுக்கு உதவ வேண்டும். அதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்.

அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல் எடுப்பதையும் ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். பாலியல் செய்திகளை ஒருபோதும் பரபரப்பாக வெளியிட வேண்டாம் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னா உயர் நீதிமன்றம் முசாரப்பூர் விடுதி பலாத்காரம் தொடர்பான செய்திகளை வெளியிட ஒட்டுமொத்த தடைவிதித்து இருந்தது. அந்தத் தடையை நீக்குகிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Leave a comment