படையினரின் பாலியல் சித்திரவதைகள் தொடர்கின்றன- சர்வதேச அமைப்பு அறிக்கை

271 0

இலங்கையில் தமிழர்கள்  அரச படையினரால் பாலியல் ரீதியிலான  சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம்  தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் ஐடிஜேபீ அமைப்பு  இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு வருடகாலமாக குறிப்பிட்ட அமைப்பினால் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து ஐடிஜேபீ அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அமைப்பு யுத்தத்தின்போதும் அதன் பின்னரும்  தமிழ் மக்கள் படையினரால் பாலியல் ரீதியில் சித்திரவதைகளை அனுபவித்தனர் என குறிப்பிட்டுள்ளது.

தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்திலிருந்து நன்மையடையும் பாதுகாப்பு தரப்பினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என ஐடீஜேபீ அமைப்பு தெரிவித்துள்ளது.

1987 முதல் 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசபிரதிநிதிகள் பல வருடங்களாக இவ்வாறான பிரச்சினையொன் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம்  தீவிரமடைந்துள்ளது எனவும் ஐடிஜேபீ யின் அறிக்கை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இவ்வாறான பாலியல் சித்திரவதைகளில் ஈடுபட்டதாக எவரும் குற்றம்சாட்டவில்லை,இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை விடுதலைப்புலிகள் கடுமையாக தண்டித்தனர் எனவும் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த பல்வேறு பிரிவினர் பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுவதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர் படைத்தரப்பை சேர்ந்த பலர்  இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு புனர்வாழ்வு முகாம்கள் இராணுவ முகாம்கள் சிறைச்சாலைகள் மற்றும் சிஜடியினரின் டீஐடியினரின் உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் போன்றவற்றில இந்த சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிராதவர்களை  கைதுசெய்யும் அல்லது கடத்தும் போக்கு காணப்படுகின்றது, உதாரணமாக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் நெருங்கிய உறவினர்கள் போன்றவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a comment