ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகனுக்கு பிணை

10116 0

இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நான்கு பேர் தலா 02 இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் இன்று புதன்கிழமை (19) விடுதலை செய்யப்பட்டனர்.

வெளிநாடு செல்வதாயின் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவனரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்றும் மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மானப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் 14.8.2018 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளினால், நிர்மானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் கட்டிட நிர்மான நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில், பொலிஸ்மா அதிபர் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மானிக்கப்ட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மானப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது 03.10.2018ம் திகதி மீண்டும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதுடன், சந்தேக நபர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜர்படுத்தும் படி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.

Leave a comment