திலீபனின் இறுதிநாள் யாழ் மாநகரசபையில் இடம்பெறும்- மேயர் ஆனோல்ட்

5605 0

தியாகதீபம் தியாகி திலீபனின் இறுதி நினைவுநாள் நிகழ்வுகள், யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறுமென யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள  ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

செப்டம்பர் 26 ஆம் நாள் 1987 ஆம் ஆண்டு எமக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணத்தை நிகழ்த்தி, எமது மக்களின் விடுதலைக்காக அகிம்சா ரீதியான தனது போராட்டத்தில் தனது 23 ஆம் வயதில் இன்னுயிரை நீத்தார் அண்ணன் திலீபன் (இராசையா பார்த்தீபன்).

அன்றுமுதல் அகிம்சாமூர்த்தியாக எமது மக்கள் எமது அண்ணனை “தியாக தீபம் தியாகி லெப்டினன் கேனல் திலீபன்” என்று மகுடம்சூட்டி இற்றைவரை நினைவு கூர்ந்து வருகின்றார்கள்.

இந்த நாட்டின் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் எவ்விதமான பேதங்களும் முரண்பாடுகளுமற்று தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவத்தோடு நோக்குவதும் அவரது மகோன்னத தியாகத்தை மரியாதையோடு நினைவுகூர்வதும் தொடர்ந்தும் நிகழ்ந்துவருகின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது.

தியாக தீபம் தியாகி திலீபன் தனது மக்களின் விடுதலைக்காக தனது அகிம்சா ரீதியான போராட்டத்தை நிகழ்த்திய நல்லூர் மண்ணும், அவர் தனது உயிரை தனது மக்களுக்காக ஆகுதியாக்கிய மண்ணும் யாழ் மாநகர எல்லைக்குள் அமைந்திருக்கின்ற காரணத்தினால் அன்றுமுதல் இன்றுவரை யாழ் மாநகரசபை தியாக தீபம் தியாகி திலீபனை கௌரவப்படுத்துவதிலும், அவருக்கான நினைவாலயம் அமைப்பதிலும், வருடாவருடம் அவரை நினைவுகூர்வதையும் தனது பொறுப்பிலேயே நிகழ்த்திவருகின்றது.

அண்ணன் தியாக தீபம் தியாகி திலீபன் அவர்கள் தமிழ்பேசும் மக்களுக்கானவர் மாத்திரமல்லர், அவர் அகிம்சா ரீதியாகப் போராடுகின்ற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமுரியவர். அவர் ஒரு கட்சிக்கோ ஒரு இனத்திற்கோ உரியவர் அல்ல மாறாக விடுதலை வேண்டிய அனைவருக்குமானவர்.

தேசியத் தலைவர் தியாக தீபம் திலீபன் அவர்களை தனது மகன் என்று விழித்துப் பேசியிருக்கின்றார் தனது போராட்டம் தமிழ்பேசும் மக்களுக்கானது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார். இவ்வாறான ஒரு கட்டுக்கோப்பான இயக்கத்தின்வழி வந்த ஒரு தியாகியை நினைவுகூர்வதில் எவ்வித பேதங்களும் பாராட்டப்படக்கூடாது.

எல்லாவிதமான முரண்பாடுகளையும் களைந்து தமிழ்பேசும் மக்களாக எதிர்வரும் 2018 செப்டம்பர் 26 ஆம் திகதி தியாக தீபம் தியாகி திலீபனின் இறுதிநாள் நிகழ்வுகள் யாழ் மாநகரசபையின் முழுமையான ஏற்பாட்டில் இடம்பெறும் அனைவரையும் ஒற்றுமையாக இறுதிநாள் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு யாழ் மாநகரசபை சார்பில் நான் அழைப்புவிடுக்கின்றேன்.

இந்நிகழ்விற்கு மேலதிகமாக குறித்த நினைவிடத்தைச் சூழ வேறும் நிகழ்வுகள் இடம்பெறுவதற்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது; என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறும், அனைத்துத் தரப்பினரையும் முன்கூட்டியே நான் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

அவர் உண்ணாவிரதமிருந்த இடத்தில் அகவணக்க நிகழ்வுகள் இடம்பெற்று அடுத்து, பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மலரஞ்சலி செலுத்துதல் நிகழ்வுகள் அனைத்தும் நினைவுத்தூபிக்கு அருகாமையில் இடம்பெறும்.

எமது போராட்டத்தை நேசிக்கும், எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் அனைத்துத் தமிழ்பேசும் மக்களின் பங்குபற்றுதலோடு சிறப்புற இடம்பெற அனைவரையும் ஒத்துழைக்குமாறு மீண்டுமொருதடவை வலியுத்த விரும்புகின்றேன் என அவ்றிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment