பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

248 0

பாளை மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலீசாரிடம் இருந்து இரும்பு கம்பிகள், கத்தி மற்றும் அலுமினிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் அறையில் சொகுசாக இருந்த காட்சிகள் சமீபத்தில் வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னை புழல் ஜெயிலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கைதிகள் பயன்படுத்திய செல்போன்கள், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த டி.வி.க்கள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து சென்னை புழல் ஜெயிலில் இருந்த பல அதிகாரிகள், சிறைக்காவலர்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். அமைச்சர் சண்முகம் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் முக்கிய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. கடந்த 16-ந்தேதி கோவை, சேலம், கடலூர் ஆகிய மத்திய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென்று நெல்லை மாநகர போலீசார் பாளை மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்காக மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் விஜயகுமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 5 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 ஆயுதப்படை போலீசார்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த போலீசார்கள் என 73 பேர் அதிரடியாக இன்று காலை 6 மணிக்கு பாளை மத்திய சிறைக்குள் நுழைந்தனர்.

இதைத்தொடர்ந்து பாளை சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறைக்காவலர்கள் அவர்களை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் அழைத்து சென்றனர். அனைத்து பகுதிகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். 5 பிரிவுகளாக போலீசார் பிரிந்து சென்று இந்த சோதனைகளை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தற்போது பாளை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 649 பேர்களும், விசாரணை கைதிகள் 503 பேர்களும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் 54 பேர்களும், ஒரு தூக்கு தண்டனை கைதியும், முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகளும் என மொத்தம் 1212 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கி இருந்த சிறை வார்டுகள் மற்றும் காலையில் அவர்கள் செல்லும் கழிவறைகள், குளியலறைகள், மைதானங்கள் ஆகியவற்றிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடந்தது. மேலும் கைதிகள் அறையில் அவர்களுக்கு விதிமுறைகளை மீறி ஏதேனும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

இந்த அதிரடி சோதனையில் போலீசாரிடம் 2 இரும்பு கம்பிகள் மற்றும் கத்தி போன்ற 1½ அங்குலம் அகலத்தில் 1 அடி நீளம் உள்ள 2 அலுமினிய தகடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன்களோ, கஞ்சா போன்ற போதை பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சோதனை இன்று காலை 6 மணியில் இருந்து 7.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் மூலம் ஏதேனும் தவறான காரியங்கள் நடந்துள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் பாளை மத்திய சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை நடப்பதை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் முன்பகுதி மற்றும் வெளிப்புற சுற்று பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a comment