இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் சர்வதேசத்திடம் மனு கையளிப்பு

235 0
இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் இன்று சர்வதேசத்திடம் தங்கள் கோரிக்கை மனுக்களை கையளித்துள்ளனர்.கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் தங்களது மனுக்களை கையளித்துள்ளனர்.
தொடர்ந்து கடந்த ஆட்சிக் காலத்தில் அரங்கேறியிருந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்டித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து சுவிஸ் தூதரகத்திற்கு சென்ற குடும்ப ஒன்றியத்தினர் அங்கு, தூதுவரின் பிரிதிநிதியான டெமியானோவிடம் மனுவொன்றை கையளித்தனர்.அங்கு அவர்களுக்கு சுவிஸ் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேநீர் விருந்துபசாரமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேநீர் விருந்துபசாரத்தை தொடர்ந்து அவர்களின் பிரச்சினைகளை சுவிஸ் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.கடந்த 2008ஆம் ஆண்டு, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், தற்போதைய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் உள்ளிட்ட அறுவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, சுமார் 6 மாதகால குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையை தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment