ஆண் குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர்: டாக்டர் காமராஜ் பேச்சு

398 0

பாலியல் பலாத்காரத்திற்கு பெண் குழந்தைகள் மட்டுமன்றி ஆண்குழந்தைகளும் அதிக அளவில் ஆளாகின்றனர் என மருத்துவர் டாக்டர் காமராஜ் கூறினார்.

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கையெழுத்து இயக்கம் 3 நாட்கள் நடைபெற்றது.

இதன் கடைசி நாளான இன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி பயிலும் மாணவ மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

அதன்பின்னர் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் உலக பாலியல் சங்க பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ், மீடியா கமிட்டி தலைவர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி, உளவியல் நிபுணர் டாக்டர் ஜி.ராஜமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடையே டாக்டர் காமராஜ் பேசியதாவது

குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வதற்கு பல காரணிகள் உள்ளன. பெண் குழந்தைகள் மட்டுமன்றி ஆண் குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். முதலில் இந்த குற்ற செயலில் ஈடுபடுகிறவர்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக செய்வர்.

உதாரணத்திற்கு குழந்தைகள் விரும்பும் பொருட்களை கொடுத்து தன்வசப்படுத்துவர். பிறகு தனது விருப்பம் நிறைவேறியதும் இந்த குற்ற செயல்குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டுவர்.

இவர்களில் பலர் வெளியிலிருந்து வரும் நபர்களாக இருக்க மாட்டார்கள், பெரும்பாலும் வீட்டில் அல்லது மிக அருகாமையில் உள்ள நபர்களாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட குழந்தை சரியாக படிக்காமலும், தனது பணிகளை சரியாக செய்யாமலும், உணவு மற்றும் தூக்கம் ஆகிய விஷயத்தில் குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனித்து, அவர்களிடம் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்வது நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment